21.10.2021 மலேசியத் தமிழ்க்கல்வி நாள் நல்வாழ்த்துகள்

டத்தோ ப.கமலநாதன் அவர்களின் வாழ்த்துச் செய்தி

மலேசியத் திருநாட்டில் 21.10.1816ஆம் நாள் அதிகாரப்படியாகத் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டது என்று ஆவணங்கள் உறுதிபடுத்துகின்றன. பினாங்கில் உள்ள பொதுப் பள்ளியில் ஒரு வகுப்பறையில் தமிழ்க்கல்வி தொடங்கியது.

அதற்கு முன்னர் பல ஊர்களில் பல தோட்டங்களில் தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டுள்ளன. ஆயினும் அப்பள்ளிகள் முறையாகப் பதிவு பெற்றிருக்கவில்லை. தனிநபர்கள், இயக்கங்கள், தோட்ட முதலாளிகள் ஆகியோரின் தன்னார்வத்தின் அடிப்படையில் நாட்டில் பல குடிசைப் பள்ளிகளும் திண்ணைப் பள்ளிகளும் செயல்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது.

1816ஆம் ஆண்டில் பினாங்குப் பொதுப்பள்ளியில் திறக்கப்பட்ட தமிழ் வகுப்பிலிருந்து மலேசியத் தமிழ்க்கல்வியின் வரலாறு அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகின்றது. அதன் அடிப்படையில் பார்தோமானால், மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டு இந்த 2021இல் 205 ஆண்டுகள் நிறைவைக் காண்கின்றது.

கடந்த 205 ஆண்டுகளில் மலேசியத் தமிழ்க்கல்வி வரலாற்றில் பல பரிணாமங்களைக் கண்டு வந்திருக்கின்றோம். காலந்தோறும் பல்வேறு சிக்கல்கள், சிரமங்கள், நெருக்கடிகள், போராட்டங்கள் எனப் பல காலக்கட்டங்களைக் கடந்து வந்திருக்கின்றோம். அதே வேளையில், நல்ல மாற்றங்கள், மறுமலர்ச்சி, முன்னேற்றம், மேம்பாடு என மகிழ்ச்சியளிக்கும் பல வளர்ச்சிகளையும் கண்டிருக்கின்றோம்.

மலேசியத் தமிழ்க்கல்வி வரலாற்றில் தமிழ்ப்பள்ளிகளுக்கே முதன்மையான பங்கும் இடமும் இருக்கின்றது என்றால் அது மிகையாகாது. தமிழ்க்கல்வியின் இன்றைய முன்னேற்றத்திற்குத் தமிழ்ப்பள்ளிகளே அடித்தளம் என்று கூறலாம்.

ஒரே ஒரு வகுப்பறையில் தொடங்கி பிறகு மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் மொழி பயிலப்பட்டுள்ளது. பிறகு ஆறாம் வகுப்பு வரையில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டுள்ளன. அதன்பிறகு இடைநிலைப்பள்ளியிலும், ஆறாம் படிவத்திலும் தற்போது பல்கலைக்கழகம் வரையில் தமிழ்மொழியைப் பயிலக்கூடிய வாய்ப்பு நம் நாட்டில் உருவாகியுள்ளது.

மழலையர் பள்ளி தொடங்கி முனைவர் பட்டம் வரையில் தமிழைப் படிக்கின்ற உரிமை மலேசிய நாட்டில் வழங்கப்பட்டுள்ளது. அந்த உரிமையைப் பெற்றுக்கொடுத்தது மட்டுமல்லாமல் விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றி வந்துள்ள நமது முன்னோடிகளை இந்தத் தருணத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன்.

தமிழ்க்கல்வி நமது உரிமை என்பதில் நம்மில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கக்கூடாது. கடந்த 205 ஆண்டுகளாக நமது முன்னோடிகள் மற்றும் சமுதாயத்தின் மேனாள் தலைவர்களின் அயராத உழைப்பினால் தமிழ்க்கல்வியும் தமிழ்ப்பள்ளியும் இன்றுவரையில் நிலைத்து இருக்கின்றன.

அடுத்து வருகின்ற நூற்றாண்டுகளுக்குத் தமிழ்க்கல்வியையும் தமிழ்ப்பள்ளியையும் கடத்திச் செல்ல வேண்டியது இன்றைய தலைமுறையில் வாழும் நம் அனைவருடைய கடமையாகும்.

அடுத்த தலைமுறையிலும் தமிழ்க்கல்வி வாழ வேண்டும்; தமிழ்ப்பள்ளிகள் இந்த நாட்டில் நிலைத்து இருக்க வேண்டும். அதற்காக நாம் ஆற்ற வேண்டிய செயல்பாடுகளைத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும்.

தமிழ்ப்பள்ளிகள் வெறும் கல்விக்கூடங்கள் கிடையாது. தமிழ்ப்பள்ளிகள் நமது அடையாளங்கள். நமது மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, சமயம், பாரம்பரியம் போன்ற நமது விழுமியங்களைப் பாதுகாக்கும் இடமும் வளர்த்தெடுக்கும் இடமும் தமிழ்ப்பள்ளிகள்தாம்.

தமிழ்ப்பள்ளிகள் நமது சமுதாய ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் மிக மிக அவசியம். தமிழ்ப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பெருமளவில் பங்களிப்புச் செய்கிறார்கள் என்பது வெள்ளிடைமலை. தமிழ்ப் படித்த மாணவர்கள் இந்த நாட்டில் சிறப்பாக முன்னேற முடியும் என்பதற்கு ஏராளமான சான்றுகள் நமது கண் முன்னே இருக்கின்றன.

எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்ப்பள்ளிகள் இந்த நாட்டிற்குப் பலமாகத்தான் இருக்கின்றன. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து நடக்கும் சிறந்த குடிமக்களைத் தமிழ்ப்பள்ளிகள் உருவாக்கியுள்ளன என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.  

ஆகவே, தமிழ்ப்பள்ளிகளின் இருப்பையும் நிலைப்பாட்டையும் தொடர்ந்து உறுதிபடுத்துவோம். தமிழ்ப்பள்ளிகளின் தரத்தையும் மாணவர்கள் எண்ணிக்கையையும் வளப்படுத்துவோம். இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்மொழி பயிலப்படுவதை முறையாகச் செயல்படுத்துவோம். பல்கலைக்கழகங்களில் தமிழை எடுத்துப் பயில்வதற்கு மாணவர்களை ஊக்கப்படுத்துவோம்.

தமிழ் – தமிழ்க்கல்வி – தமிழ்ப்பள்ளி ஆகிய மூன்றையும் கருத்து மாறுபாடு இல்லாமல் ஆதரிப்போம். உயிருக்கு நிகரான இனியத் தமிழை இணைந்து வளர்ப்பதற்குத் தமிழ்ப்பள்ளியும் தமிழ்க்கல்வியும் மிக மிக அவசியம் என்பதை உணர்ந்து அடுத்த இலக்குகளை நோக்கி நம்பிக்கையோடு அடியெடுத்து வைப்போம்.

மலேசியாவில் தமிழ்க்கல்விக்காகவும் தமிழ்ப்பள்ளி நலனுக்காகவும் தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும் அயராது பாடாற்றும் எல்லாருக்கும் அடியேனின் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் தமிழ்ப்பணிகள் போற்றுதலுக்கு உரியன. எந்தக் கைமாறும் கருதாமல் தமிழ்ப் பணியொன்றே கடமையென்று தமிழ் உள்ளத்துடன்; தமிழ் உணர்வுடன் பணியாற்றும் தமிழ் நெஞ்சங்களை நன்றியுடன் வணங்கி மகிழ்கிறேன். அடுத்த தலைமுறைக்கு நமது அன்னைத்தமிழை அழைத்துச்செல்ல இருக்கும் தமிழ்ப் பயின்ற – பயிலும் – பயிலவுள்ள மாணவர்களைப் பாராட்ட விரும்புகிறேன்.

மலேசியத் திருநாட்டில் 21.10.1816ஆம் நாள் அதிகாரப்படியாகத் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டதன் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 21ஆம் நாளைத் தமிழ்க்கல்வி நாளாகக் கொண்டாடி மகிழ்வோம்.

அனைவருக்கும் தமிழ்க்கல்வி நாள் நல்வாழ்த்துகள்.

One Reply to “21.10.2021 மலேசியத் தமிழ்க்கல்வி நாள் நல்வாழ்த்துகள்”

  1. தொடர்வோம் தமிழ் தொட்டு
    வளர்ப்போம் தமிழ்க்கல்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *