நாம் மிகவும் நேசிக்கும் நம் மலேசிய நாட்டில் நமது தாய்மொழியாம் தமிழ்மொழி நிலைத்து இருப்பதற்குத் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் மிக முக்கியக் காரணம்.
ஆகவே, நமது நாட்டில் தமிழ்மொழியையும் தமிழ்க்கல்வியையும் நாம் தொடர்ந்து காக்க வேண்டும்; வளர்க்க வேண்டும். நம்முடைய அடுத்த தலைமுறைக்குத் தமிழ்மொழியையும் தமிழ்க் கல்வியையும் கொண்டு சேர்க்க வேண்டியது இன்றைய தலைமுறையில் வாழுகின்ற நம் எல்லாருடைய கடமையாகும் என்று டத்தோ ப.கமலநாதன் குறிப்பிட்டார்.

மலேசியத் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழா ஏற்பாட்டுக் குழு அறிமுக நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய அவர் இவ்வாறு தெரிவிடத்தார். கடந்த 21.07.2021 புதன்கிழமையன்று இயங்கலை மூலமாக நடந்த இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘மலேசியத் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவினை நடத்துவதற்கு ஏற்பாட்டுக் குழு அமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், மலேசியக் கல்வி அமைச்சின் அனுமதியோடும் மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகம் மற்றும் மலாயாத் தமிழ்ப்பள்ளித் தமிழாசிரியர் சங்கம் ஆகிய அமைப்புகளின் இணை ஆதரவோடும் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெறும் என்றாரவர்.
ஏற்பாட்டுக்குழுத் துணைத்தலைவர் அ.சு.பாஸ்கரன் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் பற்றி விளக்கமளித்தார். மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத் தலைவர் மு.அர்ச்சுணன், மலாயாத் தமிழ்ப்பள்ளித் தமிழாசிரியர் சங்கத் தலைவர் மு.இரவிந்திரன், சிலாங்கூர் மாநிலத் தலைமையாசிரியர் கழகத் தலைவர் மு.தமிழரசு ஆகியோரோடு கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் எனப் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மலேசியத் தமிழ்க்கல்வி விழா நடத்துவது மிகவும் நல்லதொரு முன்னெடுப்பாகும். மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தமிழ்க்கல்வி மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு பற்றுதலை உருவாக்குவாக்கவும் பயன்படும் என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர் கருத்துரைத்தனர்.
ஏற்பாட்டுக் குழுச் செயலாளர் சுப.சற்குணன் நிகழ்ச்சியினை நெறியாள்கை செய்து வழிநடத்தினார்.