மலேசியாவில் எங்கே, எப்படி தொடங்கியது தமிழ்க்கல்வி?

பினாங்குப் பொதுப் பள்ளி [Penang Free School] என்கிற ஆங்கிலப் பள்ளியை, பினாங்குத் தீவில் திரு Rev.Robert Sparke Hutchings என்ற ஆங்கிலப் பாதிரியார் 1816-இல் தொடங்கினார். The Prince of Wales என்கிற ஐரோப்பிய மாநிலத்தைச் சேர்ந்தவர் இவர்.

இந்தப் பள்ளியே தென்கிழக்கு ஆசியாவின் முதல் ஆங்கில பள்ளி ஆகும். மலேசியாவில் தமிழ் கல்விக்கான தொடக்கம் இந்த பள்ளியிலிருந்து தான் தொடங்கியது.

1816-இல் தொடங்கப்பட்ட தமிழ்வகுப்பு போதிய ஆதரவு இல்லாததால் 1818-இல் மூடப்பட்டது. இதனையடுத்து 1834-இல் சிங்கப்பூர் பொதுப் பள்ளியில் [Singapore Free School] தமிழ்வகுப்பு தொடங்கப்பட்டு, அதுவும் போதிய ஆதரவு இல்லாமல் 1839-இல் மூடப்பட்டது.

1850-இல் மலாக்காவில் ஆங்கிலேயத் தமிழ்ப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. இதுதான் மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி. 
இப்பள்ளி தொடர்பான தகவல்கள் அதிகம் கிடைக்கவில்லை. ஆனால் இதுவும் சில ஆண்டுகளில் போதிய ஆதரவின்றி மூடப்பட்டது.

1859-இல் சிங்கப்பூரில் செயிண்ட் பிரான்சிஸ் சேவியர் மலபார் பள்ளி, ஒரு தமிழ் வகுப்பைத் தொடங்கியது. 1895-இல் கோலாலம்பூர், செந்தூலில் கிருத்துவப் பாதிரியார் தவத்திரு ஆப்ரஹாம், தமிழ்ப்பள்ளியைத் தொடங்கினார். 1897-இல் இப்பள்ளி மெத்தடிஸ்ட் ஆண்கள் பள்ளியானது. 1870-களுக்குப் பிறகு புரவின்ஸ் வெலஸ்லி என்று அழைக்கப்பட்ட செபராங் பிறை, மலாக்கா, நெகிரி செம்பிலான், வட ஜொகூர் ஆகிய மாநிலங்களில் உள்ள தோட்டங்களில் தமிழ்ப்பள்ளிகள் உருவாயின.

1901 இல் தாய்மொழிக் கல்வியை விரும்பாத கூட்டரசு மலாய் மாநிலக் கல்வி அதிகாரி ஜே. டிரைவர், குடியேற்றம் செய்தவர்களின் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் அவர்களுக்கெனத் தனிப்பள்ளிகள் தேவை இல்லை என்ற கருத்தினை வெளியிட்டார்.

இதனால், சிலாங்கூர் மாநில ரெசிடெண்டாக இருந்த W.H. Treacher 1901-இல் வெளியிட்ட அறிக்கையில், மலாய் பள்ளிகளுக்கான கல்வி செலவு தவிர மற்ற இனத்தவரின் தாய்மொழி கல்விக்கு அரசு பொறுப்பேற்காது என்று அறிவித்தார்.

1912-இல் ஆங்கிலேயே அரசு அறிமுகப்படுத்திய தொழிலாளர் சட்டம் தமிழ்ப்பள்ளிகள் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. 7 முதல் 14 வயதுள்ள 10 பிள்ளைகள் இருந்தால் அத்தோட்டத்தில் தமிழ்ப்பள்ளையை நிறுவ வேண்டும் என்று இச்சட்டம் வலியுறுத்தியது. இதனால் தோட்ட முதலாளிகள் தோட்டப்புறங்களில் வேலை செய்த தமிழர்களின் குழந்தைகளுக்கு, தமிழ்ப்பள்ளிகள் அமைத்துத் தரும் நிலை உருவாகியது.

1938 இல் 535 தமிழ்ப்பள்ளிகள் இருந்த நிலையில், 1978 இல் 888 ஆக அதிகளவில் இருந்தன. தற்போது 525 பள்ளிகள் நிலைத்துள்ளன.

மலேசியா விடுதலை பெறும் சூழலில் 1956 இல், இரசாக் கல்வி அறிக்கை தொடக்கப்பள்ளியில் தமிழ் வழிக்கல்வி உருவாகக் காரணமாக இருந்தது. இடைநிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் மலாய் மொழியில் பாடங்களைக் கற்றாலும் மொழிப்பாடமாகத் தமிழை எடுத்துக் கொள்ளலாம்.
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தமிழில் பட்டப் படிப்பு படிக்கலாம்.

தமிழாசிரியர் பயிற்சிப் படிப்பு, இளங்கலை, முதுகலை, முனைவர் பட்ட ஆய்வு வரை தமிழில் மேற்கொள்ளலாம்.மலாயாப் பல்கலைக்கழகம், சுல்தான் இதுரீசு பல்கலைக்கழகம் ஆகியன தமிழில் பட்டப் படிப்பு வழங்குகின்றன.

இவ்வாறு மலேசியாவில் தமிழ்க்கல்வி கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக காக்கப்பட்டு வருகின்றது; வளர்ந்தும் வருகின்றது.

நன்றி : veeralakshmiweb.wordpress.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *