மலேசியாவில் தமிழ்க்கல்வி வரலாறும் வளர்ச்சியும்

பாஸ்கரன் சுப்பிரமணியம்
[மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேனாள் முகமை அமைப்பாளர்

எங்கள் நாடு மலேசியா

மலேசிய நாடு உலக வரை படத்தில் தென்கிழக்காசியாவில் அமைந்திருக்கிறது. வடக்கே தாய்லாந்து நாடும் தெற்கே சிங்கப்பூர் நாடும்  அமைந்துள்ளன. மேற்கே மலாக்கா நீரிணையும் கிழக்கே தென்சீனக்கடலாலும் சூழப்பட்டுள்ளது எங்கள் மலேசியா நாடு. மொத்த மக்கள் தொகை 31.7 மில்லியன் ஆகும்.  இதில் மலாய்க்காரர்கள் 68.8   சதவீதமாகும். சீனர்கள் 23.2 சதவீதமாகும். இந்தியர்கள் 7.0 சதவீதமாகும். 

மலேசியாவில் தமிழ் அன்னை மகுடத்தில்  வீற்றிருப்பதற்குக் காரணம் எங்கள் நாட்டில் இயங்கும் தமிழ்ப்பள்ளிகளே என்றால் அது மிகையாகாது. 1816ஆம் ஆண்டு 21 அக்டோபர் திங்களில் ஆதவன் தமிழோடு உதித்தான். அன்றுதான் எங்கள் நாட்டில் தமிழ்க்கல்வி எனும் அரும்பு பூத்து மலர்ந்தது.

அன்று மலர்ந்த தமிழ்மலர் காயாகி, பழமாகி, விதையாய் மலேசியா நாடு முழுவதும் தமிழர்கள் வாழும் தமிழ் மண்ணில் வீழ்ந்து இன்று விருட்சமாக; 524 தமிழ்ப்பள்ளிகளாக வளர்ந்து உள்ளது. மழையர் கல்வி தொடங்கி பல்கலைக்கழகம் வரை  எங்கள் நாட்டிலே தமிழ் சிறப்பாக மகுடத்தில் வீற்றிருக்கிறது.

தமிழ்க்கல்வியின் வரலாறு

மலேசியாவில் தமிழ்க்கல்வி வரலாறு 19 நூற்றாண்டில் தொடங்கியது.  தமிழ்நாட்டிலிருந்து மலாயாவுக்கு தமிழர்கள் ஒப்பந்த கூலிகளாக ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டனர்.  மலாயாவுக்கு கொண்டு வரப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இரப்பர் தோட்டங்களில் குடியமர்த்தப்பட்டனர். அக்காலகட்டத்தில் 1816 ஆம் ஆண்டில் பினாங்கு மாநிலத்தில் ‘ரெவரண்ட் ஹாட்சிங்ஸ் (Rev.Hutcings) என்பவரின் முயற்சியால் பினாங்கு பொதுப்பள்ளி (Penang Free School) தோற்றுவிக்கப்பட்டது.

இப்பள்ளியில் 21.10.1816இல் தமிழ்வகுப்பு ஒன்று முதன் முதலாக  தொடங்கப்பட்டது. இதுவே மலேசிய நாட்டின் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து 1834 இல் சிங்கப்பூரில் மற்றுமொரு தமிழ் வகுப்பு  தொடங்கப்பட்டது. 1895 ஆம்  ஆண்டு கோலாலம்பூரில் செந்தூல் எனும் இடத்தில் ஆங்லோ தமிழ்ப்பள்ளி நிறுவப்பட்டது. பின் அது மெத்தடிஸ் ஆண்கள் பள்ளியாக மாற்றம்  கண்டது.

1898 ஆம் ஆண்டு சிரம்பான் ஜாவா லேன் தமிழ்ப்பள்ளி துவங்கப்பட்டது. 1900 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் பேரா மாநிலத்தில் பாகான் செராய் அரசினர்  தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் பல்வகை தாய்மொழிக் கல்வியை விரும்பவில்லை. குடியேற்றக்காரர்களின் பிள்ளைகள்  குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் அவர்களுக்கென தனிப்பள்ளிகள் தேவையில்லை என  ஆங்கிலேயர்கள் கருதினர்.

1912 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் அமல்படுத்தப்பட்ட  தொழிலாளர் சட்டமானது (Labour Ordinance)   தமிழ்ப்பள்ளிகளின் கட்டாய வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கியது. 7 முதல் 14 வயதில் 10 மாணவர்கள் இருந்தால் ஒவ்வொரு தோட்டத்திலும்  தனித்தனி பள்ளிகள் அமைக்கப்பட்டன. இதன் விளைவு    1920 ஆம் ஆண்டில் 122 தமிழ்ப்பள்ளிகள் உருவாகின.

இதனைத்  தொடர்ந்து இரப்பர் தோட்டங்கள் அதிகரிக்க தொடங்கின. இக்காலகட்டத்தில் திண்ணைப்பள்ளி அமைப்பில் தோட்டங்கள் தோறும் தமிழ்ப்பள்ளிகள் உருவாகின. தோட்டப் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இவ்வகைப் பள்ளிகள் வீடுகளிலும் சில பொது இடங்களிலும் செயல்பட்டன.

அன்றைய நாளில் 4 வகையான தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டன.

            அ) தோட்டப்புறப்பள்ளிகள்

            ஆ) அரசுப்பள்ளிகள்

            இ) சமய இயக்கப்பள்ளிகள்

            ஈ)  தனியார் பள்ளிகள்

1957ஆம் ஆண்டுத் தொடக்கம் தோட்டங்கள் தோறும் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் படப்படியாக வளரத்தொடங்கி இன்று 524  தமிழ்ப்பள்ளிகள் நாட்டிலே இயங்கி வருகின்றன. 

இடைநிலைப்பள்ளிகளிலும் தமிழ்மொழி….  

இடைநிலைப்பள்ளிகளில் புதுமுக வகுப்பு தொடங்கி படிவம் ஐந்து வரையிலும் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது. 1989ஆம் ஆண்டு இடைநிலைப்பள்ளிகளுக்கான புதிய கலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் இடைநிலைப்பள்ளிகளுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட கலைத்திட்டமும் அமுல்படுத்தப்பட்டது. 2017ஆம் ஆண்டு தொடங்கி இடைநிலைப்பள்ளிகளுக்கான தர அடிப்படையிலான கலைத்திட்டமும் முதலாம் படிவத்தில் அமல்படுத்தப்படவும் உள்ளது. தற்போது தமிழ்மொழி மாணவர்களின் தாய்மொழிக் கல்வி (POL) முறையிலும் முழுநேரமாகவும் வகுப்பில் போதிக்கப்பட்டு வருகின்றது. மூன்றாம் படிவத்தில் பிடி3 (PT3) தேர்விலும் ஐந்தாம் படிவத்தில் எஸ்.பி.எம் (SPM) தேர்விலும் அங்கீகரிக்கப்பட்ட பாடமாகவும் தமிழ் விளங்குகின்றது. ஐந்தாம் படிவ மாணவர்கள் தமிழைத் தவிர்த்து தமிழ் இலக்கியத்தையும் தேர்வுப் பாடமாக பயிலும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர் என்பதுவும் மற்றொரு மகிழ்வூட்டும் தகவலாகும். ஆறாம் படிவ உயர்நிலைக்கல்வியிலும் தமிழ்மொழி முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆறாம் படிவத்தில் தமிழைத் தேர்வுப் பாடமாக எடுத்துச் சிறந்த தேர்ச்சியினைப் பெறும் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் தகுதியையும் பெறுகின்றனர். தமிழ்மொழியில் சிறந்த புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழை முதன்மைப் பாடமாக பயிலும் வாய்ப்பும் வழங்கப்படுகின்றது.

பல்கலைக்கழகங்களில் தமிழ்

நாட்டின் முதல் பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக்கழகத்தில் 1956 முதல், கலை சமூகவியல் புலத்தில் இந்திய ஆய்வியல் துறையின்கீழ் தமிழ் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்திய ஆய்வியல் துறையில் தற்காலத் தமிழ் இலக்கியம், சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம், இலக்கணம் ஆகியவை கற்பிக்கப்படுகிறது. மேலும், மலாய்மொழியில் தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம், ஆகியவற்றைப் பற்றியும் கற்பிக்கப்பட்டு வருகின்றது. மலாயாப் பல்கலைக்கழகத்தின் மொழி, மொழியில் புலத்தில் தமிழ்மொழியியலில் இளங்கலைப் பட்டப்படிப்பு 1998ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்துறையில் தமிழ் மொழித்திறன், ஒலியியலும் ஒலியணியலும், உருபணியல், தொடரியல், மொழியும் இலக்கியமும், மொழியும் பண்பாடும், தமிழ் வட்டார வழக்கு, பனுவலாய்வியல், இருவழி மொழியாக்கம் முதலிய பாடங்கள் தமிழில் கற்பிக்கப்படுகின்றன. மலேசியாவிலுள்ள சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம், புத்ரா பல்கலைக்கழகம், சபா மலேசிய பல்கலைக்கழகம் ஆகிய அரசுப் பல்கலைக்கழகங்களில் இரண்டாம் மொழியாக எளிய தமிழ் கற்பிக்கப்படுகிறது. 1996ஆம் ஆண்டு முதல் புத்ரா பல்கலைக்கழகத்தில் வேற்றுமொழித் துறையில் (Jabatan Bahasa Asing) தமிழ் ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் இயங்கங்களும் சங்கங்களும்

எங்கள் நாட்டிலே அதிகமான தமிழ் இயக்கங்களும், சங்கங்களும் மிகச் சிறப்பாக இயங்கிவருகின்றன.  தமிழ் இளைஞர் மணிமன்றம், தமிழ் இலக்கியக் கழகங்கள், தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ் காப்பகம், தமிழ்நெறிக்கழகங்கள், கண்ணதாசன் இயக்கம் போன்ற அதிகமான இயக்கங்கள் தமிழை மையப்படுத்தி பல நிகழ்ச்சியை அவ்வப்போது நடத்தி தமிழ்மொழியை தமிழர்களின் பண்பாட்டையும் கட்டிக்காத்து வருகின்றன. அதிகமான இளம் தமிழ்படைபாளர்களை வெளிக்கொணரும் ஒரு தளமாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சிறுகதை, நாவல், கவிதைப் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவர்களின் சிறந்த படைப்புகளுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கி தமிழ்மொழிக்கு ஓர் அரணாக விளங்கி வருகின்றது.

தமிழ் ஊடகங்கள்

எங்கள் நாட்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்கு தமிழ் நாளிதழ்கள் பெரும்பங்காற்றி வருகின்றன. தமிழ்நேசன், மலேசியன் நண்பன்,  மக்கள் ஓசை, தமிழ்மலர், தாய்மொழி போன்ற பத்திரிக்கைகள் நல்ல தமிழ்ச்சான்ற கருத்துக்களைத் தாங்கி மலர்ந்து  வருகின்றன. எங்கள் நாட்டு வானொலியிலும் தொலைக்காட்சியிலும் தமிழ்மொழி  மலர்ந்து மணம் பரப்பி வருகின்றனது. அதுவும்  வானொலியில் மின்னல் பண்பலையின் மூலமாக 24  மணிநேரமும் மலேசிய மக்களின்  காதுகளுக்கு இனிமையான தமிழை கொண்டு சேர்த்த வண்ணம் உள்ளது.அதோடுமட்டுமல்லாமல் இணையதளங்களில் மின் ஊடகமாகவும் தமிழ்மொழி எங்கள் நாட்டுச் செய்திகளைத் தங்கி வருகின்றனர். தமிழ்மொழியின் சிறப்பும் தமிழனின் வளமை அடுத்த நூற்றாண்டுக்கு இளம்தலை முறையினர் இட்டுச்செல்வதற்கான ஆயத்தப்பணிகளை மலேசியத் தமிழர்கள் செய்து வருகிறார்கள். 

மலேசிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவின் காரணமாக மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. தமிழ்ப்பள்ளிகளைத் தொடந்து தக்க வைக்கவும் தரமான நிலையில் செயல்படுவதற்கும் எங்கள் மலேசிய அரசாங்கம் முழு இசைவும் ஆதரவும் உதவியும் வழங்கி வருவதை யாரும் மறுத்துவிட முடியாது.

1816 முதல் 2020 வரையில் 204 ஆண்டுகளில் பல்வேறு இடர்கள், நெருக்கடிகள், அரசியல் பூசல்கள், பொருளியல் வெல்விளிகள், சமுதாயச் சிக்கல்கள், சிந்தனைப் போராட்டங்கள், ஏற்றத் தாழ்வுகள் எனப் பற்பல பரிணாமங்களைக் கடந்து மலேசியாவில் தமிழ்க்கல்வி வெற்றிக் கண்டிருக்கும் இந்தத் தருணத்தில், மலேசியத் தமிழர்கள் அனைவரும் பெருமைகொள்கிறோம். அதே வேளையில், மலேசியாவில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அரசியல், சமூக, பொது இயக்க, தோட்டத் தொழிற்சங்க, தன்னார்வ முன்னோடிகளையும் மூத்த தலைவர்களையும் இந்தத் தருணத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றோம்.

முடிவுரை

2 நூற்றாண்டுக்கு முன் தமிழ்நாட்டிலிருந்து புலம்  பெயர்ந்து வந்தோம், அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்தாலும் தடம்  மாறாமல் தமிழ்மொழியையும் தமிழ்மரபுகளையும் தமிழ்கலை கலாச்சாரங்களையும் மறவாமல் பேணி காத்து வருகின்றோம். மலேசிய மண்ணில் தமிழாராக அழகு தமிழில் பேசி மகிழ்ந்து வாழ்கின்றோம். இராஜ ராஜ சோழன் கால்பதித்த கடாரம் தொடங்கி சிங்கப்பூர் எல்லைவரை எங்கள் நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் நல்ல தமிழ் பேசி வருகின்றனர். நாடு தோறும் தமிழர்களின் இல்லங்களில் தமிழ்மொழி புழங்கும் மொழியாக உள்ளது.

மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்ந்து நிலைக்கவும் அதனுடன் தமிழ்மொழி நிலைபெற்று வாழவும் இந்த 204 ஆண்டுகள் கொண்டாட்டம் வழிவகுக்கும். இதன்வழி மலேசியத் தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, வாழ்வியல், விழுமியங்கள் ஆகிய அனைத்தும் காக்கப்படும். அனைத்திற்கும் மேலாக மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் அடுத்துவரும் நூற்றாண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்லப்படும்; தமிழ்க்கல்வியும் தமிழ்ப்பள்ளிகளும் உலகத் தரத்திற்குச் சிறந்தோங்கும் என்பவையே மலேசியத் தமிழர்கள் எல்லாருடைய நம்பிக்கையாக இருக்கின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *