சுப.சற்குணன்
(தமிழ்ப்பள்ளி உதவி இயக்குநர், பேரா மாநிலம்)
- உலகத்தின் பழமையான மொழிகளில் தமிழும் ஒன்று. Primary Classical Language அதாவது உயர்தனிச் செம்மொழிகளில் தமிழ் ஒரு சிறந்த மொழி.
2. பேராசிரியர் மொழி ஆராய்ச்சியாளர் Berkeley University Linguist George L.Hart அவர்கள் செம்மொழிக்குத் தேவையான 11 தகுதிகள் உள்ள ஒரே மொழி உலகத்தில் தமிழ்தான் என்று நிறுவி இருக்கிறார்.
3. அதேபோல், மொழி ஞாயிறு பாவாணர் தமிழ் மிகச் சிறந்த செம்மொழி என்றும் அதற்கு 16 சிறப்புகள் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். தம்முடைய வேர்ச்சொல் ஆராய்ச்சியின் வழியாக தமிழின் மூலத்தை ஆராய்ச்சி செய்து பல நூல்கள் எழுதி தமிழின் மேன்மையைச் சான்றுபடக் கூறி இருக்கிறார்.
4. அதே போல் மகாகவி பாரதியார் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கு காணோம்’ என்று சிறப்பாகப் பாடி இருக்கிறார்.
5. தமிழ் மூதாட்டி ஔவையார் அவர்கள்
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்து நான் தருவேன்
நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா
என தமிழைப் பற்றி பாடி இருக்கிறார்.
6. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்பது பாரதிதாசன் பாடல்.
7. இப்படி எல்லாம் சிறப்பு பெற்ற நம்முடைய தமிழ்மொழி இந்தியா, தமிழ்நாடு, இலங்கை ஆகிய மண்ணில் மட்டுமே இருந்த காலம் ஒன்று இருந்தது.
8. ஆனால் இன்று, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிகா, மொழிசியஸ், பிஜி, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மன், அமெரிக்கா எனப் பல நாடுகளில் தமிழ் சென்று சேர்ந்துள்ளது. அதேபோல் தமிழ்க்கல்வி பல நாடுகளில் பள்ளிகளில் பாடமாகப் படிக்கப்படுகிறது.
9. அப்படி பார்க்கும் பொழுதுநம் மலேசியாவில் கடந்த 200 ஆண்டுகளாக நம் தமிழ்மொழி வாழ்ந்து வருகிறது; வளர்ந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த 200 ஆண்டுகளாக மலேசியாவில் தமிழ்மொழி ஒரு பாடமாக; கல்வி மொழியாக இருந்து வருகிறது என்றால் அது மிகப்பெரிய ஒரு சாதனை.
10. 200 ஆண்டுக்கும் மேலாக மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் செயல்படுகின்றது. இன்று வரையில் 525 தமிழ்ப்பள்ளிகளை நாம் காப்பாற்றி வந்திருக்கிறோம் என்பதும் ஒரு சாதனை தான்.
11. பாலர் பள்ளி தொடங்கி பல்கலைக்கழகம் வரை மலேசியாவில் தமிழைப் படிக்கும் வாய்ப்பும் உரிமையும் நமக்கு மலேசியாவில் இருக்கின்றது.
12. முனைவர் பட்டம் வரை மலேசியாவில் தமிழைப் படிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னால் அது மலேசியாவில் நாம் செய்திருக்கும் சாதனையும் வெற்றியும் ஆகும்.
13. இதற்கெல்லாம் நாம் மலேசிய அரசாங்கத்திற்கு நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும். 1957ஆம் ஆண்டில் மலேசியா சுதந்திரம் அடைந்த பிறகு மற்ற மற்ற பள்ளிகளைப் போலவே தமிழ்ப்பள்ளிகளையும் நம் அரசாங்கம் பாதுகாத்து வருகின்றது.
14. அதே போல தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியில் நமது அரசியல் அமைப்புகளும் சமுதாய இயக்கங்களும் நீண்ட காலமாகவே அக்கறை காட்டி வருகின்றன. ஒவ்வொரு முறை தமிழுக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் தமிழ்க்கல்விக்கும் இந்த நாட்டில் ஆபத்து வருவது போல இருந்தால் முதலில் குரல் கொடுப்பவர்கள் தமிழ் சமுதாய இயக்கங்களூம் அமைப்புகளும் தான்.
15. மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் 204 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதற்கு சேவை செய்தவர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக நமது முன்னேர்களை நாம் மறந்துவிடக் கூடாது. 204 ஆண்டுகளாக நமது முன்னோர்கள் பட்ட பாடுகளையும் சிரமங்களையும் இந்த வேளையில் நாம் நினைத்துப் பார்த்து நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறோம்.
16. இனிவரும் எதிர்காலத்தில் மலேசியாவில் தமிழும் தமிழ்க்கல்வியும் தமிழ்ப்பள்ளியும் வாழ வேண்டும். அதற்காக நம் முன்னோர்களைப் போல நாமும் தமிழ் உணர்வோடு செயல்பட வேண்டும். தமிழ்ப்பள்ளிகளில் நமது குழந்தைகளைப் போட வேண்டும். குறிப்பாக தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், அதிகாரிகள், ஆர்வலர்கள் அனைவரும் முன்மாதிரியாக இதனைக் கண்டிப்பாகச் செய்யவேண்டும்.