இன்பத் தமிழ்க்கல்வியை இணைந்து வளர்ப்போம்

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழா ஏற்பாட்டுக்குழுத் தலைவர் டத்தோ ப.கமலநாதன் உரை

அனைவருக்கும் வணக்கம். வாழ்க! தமிழ்நலம் சூழ்க!

மலேசியாவில் தமிழ்க்கல்வி 21.10.1816ஆம் நாள் பினாங்கு பொதுப் பள்ளியில் [Penang Free School] தொடங்கப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டில், மலேசியாவில் தமிழ்க்கல்வி 200ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் வெகுச் சிறப்புடன் நடைபெற்றது. அன்றைய கல்வித் துணையமைச்சராக இருந்த என்னுடைய தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள், மாநாடுகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு ஓராண்டு காலத்திற்கு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

1.தமிழ்க்கல்வி இலச்சினை உருவாக்கும் போட்டி

2.தமிழ்ப்பள்ளிகளில் 200 ஆம் ஆண்டுத் தமிழ்க்கல்வி பளிங்குவெட்டு பதித்தல்

3.மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

4.ஆசிரியர்களுக்கான 3 தமிழ்க்கல்விக் கருத்தரங்கம் (தென் மண்டலம், நடு மண்டலம் & வட மண்டலம்)

5.AISMT பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கல்வி மாநாடு

6.தமிழ்நாட்டில் 200ஆம் ஆண்டுத் தமிழ்க்கல்வி மாநாடு

7.200ஆம் ஆண்டுத் தமிழ்க்கல்வி நினைவாகத் தமிழ்நாட்டில் 200 மரக்கன்றுகள் நடுதல்.

8.மலேசியா தமிழ்க்க்கல்வியின் மேம்புகழ் ஆவணத் தொகுப்பு நூல் வெளியீடு

9.தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குத் தமிழ்நாட்டில் கல்விக் கருத்தரங்கம்

இப்படி பல்வேறு செயல்திட்டங்களைச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தினோம் என்பதை இங்கே நினைவுகூற விரும்புகிறேன்.

அன்பு சகோதர சகோதரிகளே,

நாம் மிகவும் நேசிக்கும் நம் மலேசிய நாட்டில் நமது தாய்மொழியாம் தமிழ்மொழி நிலைத்து இருப்பதற்குத் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் மிக முக்கியக் காரணம் என்றால் மிகையாகாது.

ஆகவே, நமது நாட்டில் தமிழ்மொழியையும் தமிழ்க்கல்வியையும் நாம் தொடர்ந்து காக்க வேண்டும்; வளர்க்க வேண்டும். நம்முடைய அடுத்த தலைமுறைக்கு தமிழ்மொழியையும் தமிழ்க் கல்வியையும் கொண்டு சேர்க்க வேண்டியது இன்றைய தலைமுறையில் வாழும் நம் எல்லாருடைய கடமையாகும்.

அந்தவகையில், இந்த 2020ஆம் ஆண்டில் மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு நிறைவைக் காண்கின்றது. இந்த ஆண்டிலும் நமது மலேசியத் தமிழ்க்கல்விக்காக ஒரு சிறப்பான கொண்டாட்டத்தை நாம் திட்டமிட்டுள்ளோம்.

21.09.2020 தொடங்கி 24.10.2020 வரை ஒரு மாதக் காலத்திற்கு ‘மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவினை நடத்துவதற்கு நாம் ஏற்பாடுகள் செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அதற்காக,  என்னுடைய தலைமையில் ஒரு ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மலேசியக் கல்வி அமைச்சின் அனுமதியோடும் மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகம் மற்றும் மலாயாத் தமிழ்ப்பள்ளித் தமிழாசிரியர் சங்கம் ஆகிய அமைப்புகளின் இணை ஆதரவோடும் இவ்வாண்டுக்கான தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெறும்.

தமிழ்மொழியையும் தமிழ்க்கல்வியையும் வளர்க்க வேண்டியது நம் எல்லாருடைய கடமை என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைய தலைமுறையில் தமிழ்க்கு நமது கடமையைச் சரியாகவும் முறையாகவும் நாம் செய்தால் அடுத்த தலைமுறையில் தமிழ் நன்றாக வாழ வைக்க முடியும். இல்லாவிட்டால் அடுத்த தலைமுறையில் நம்மைக் குறைசொல்லும் நிலைமை உருவாகிவிடும். அதற்கு நாம் சிறிதும் வழிவிடக்கூடாது.

ஆகவே, ‘மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழா” நன்முறையில் நடைபெற மலேசியத் தமிழ்ப்பள்ளிகள், தலைமை ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள், தமிழ்க் கல்வியாளர்கள், தமிழ் அதிகாரிகள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஊடகத்தினர், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம், முன்னாள் மாணவர் சங்கம், தமிழ் இயக்கங்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவரின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் அன்புடன் வேண்டுகிறேன்.

எல்லாரும் இணைந்து நம் தாய்த்தமிழுக்கும் தமிழ்க்கல்விக்கும் நம்மால் இயன்ற நன்மைகள் செய்வோம் என அன்புடன் அழைக்கிறேன்.

இறுதியாக, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டு ‘மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவை” இன்று 21.09.2020ஆம் நாள் அதிகாரப்படியாகத் தொடக்கிவைக்கிறேன்.

இன்பத் தமிழ்க்கல்வியை இணைந்து வளர்ப்போம்.

நன்றி வணக்கம்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

இப்படிக்கு;

டத்தோ.ப.கமலநாதன்

தலைவர், ஏற்பாட்டுக் குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *