வரலாறு

சோ.சுப்பிரமணி
முன்னாள் விரிவுரைஞர், மலாயாப் பல்கலைகழகம்

மலேசியாவில் 200 ஆண்டுத் தமிழ்க்கல்வி வரலாறு

தொடக்கத்தில் தொழிலாளிகளாகவும், அதன் பின்னர் ‘கங்காணி’ முறையிலும் (sistem kangani), மேலும் பலர் சொந்த செலவிலும் மலாயாவிற்கு வந்தனர். அவர்களுள் பெரும்பகுதியினர் தமிழர்களே. தமிழர்களின் வருகைக்குப் பிறகே இம்மண்ணில் தமிழ்க்கல்வி துளிர்விடத் தொடங்கிற்று. தொடக்கத்தில் பொருள் ஈட்டி மீண்டும் தாயகத்திற்குத் திரும்புவதையே நோக்கமாகக் ண்டிருந்த அவர்கள் காலப்போக்கில் மலாயாவைத் தாயகமாக்கிக் கொண்டு மலாய்க்காரர்களுடனும் சீனர்களுடனும் இயைந்து வாழத் தொடங்கினர்.

மலாய் பள்ளிகளின் தோற்றம்

ஆங்கிலேயர்களின் வருகைக்குமுன் இந்நாட்டில் மலாய் இனத்தவர் தங்களுக்கெனக் குருகுல முறையிலான இஸ்லாமியப் பள்ளிகளைத் (sekolah pondok) தோற்றுவித்தனர். இருப்பினும், மலாய் இனத்தவரைக் கிராமப்புறங்களில் நிலையாக இருத்தும் உத்தியாக ஆங்கிலேய அரசு அவர்களுக்கெனக் கிராமப்புறங்களில் மலாய்ப்பள்ளிகளைத் தொடங்கினர். சீனப் பேரரசின் துணையோடு சீனர்கள் தங்களுக்கென மலாயாவில் ஆங்காங்கே சீனப்பள்ளிகளை நிறுவினர். தமிழ்ப்பள்ளிகளோ அரசாங்க உதவியின்றித் தோட்ட முதலாளிகள், தனிநபர், கோவில் நிருவாகங்கள், சமயச் சார்புடைய இயக்கங்கள் ஆகியவற்றின் உதவியோடு நிறுவப்பட்டன. இவற்றுள் பெரும்பாலும் தோட்டப்புறப் பள்ளிகளாகவே இருந்தன என்பதுவும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

தொடக்கக் காலத் தமிழ்ப்பள்ளிகள்

இந்நாட்டுத் தமிழ்க்கல்வியின் வளர்ச்சியைக் குறித்து ஆராய முற்படும் வேளையில், முதன்முதலில் தமிழ்க்கல்வி தொடுவாய்க் குடியேற்றப் பகுதிகளில் உருவானது என்ற தகவல் கிடைக்கப் பெறுகிறது. 1816ஆம் ஆண்டு ரெவரெண்டு அட்சிங்ஸ் (Rev.R.Hutchings) என்பவரால் முதன்முதலில் பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள ஃபிரி ஸ்கூல் (Penang Free School) என்னும் ஆங்கிலப்பள்ளியில் ஒரு பிரிவாகத் தமிழ் வகுப்பு திறக்கப்பட்டது. இதுவே இந்நாட்டில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு அடிக்கல்லாக அமைந்தது எனலாம். அதையடுத்து 1834இல் சிங்கப்பூரிலுள்ள ஃபிரி ஸ்கூலின் ஒரு பிரிவாக மற்றுமொறு தமிழ் வகுப்பு திறக்கப்பட்டது. 1850ஆம் ஆண்டில் மலாக்காவில் ஆங்கிலேய தமிழ்ப்பள்ளி ஒன்று நிறுவப்பட்டது. அதன் பின்னர், சிங்கப்பூரில் 1859இல் செயிண்ட் பிரன்ஸிஸ் சேவியர் மலபார் பள்ளியில் தமிழ் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 1895ஆம் ஆண்டு தலைநகர், செந்தூலில் ஆங்கிலோ தமிழ்ப்பள்ளி நிறுவப்பட்டது. 1897இல் அது மெத்தடிஸ்ட் ஆண்கள் பள்ளியாக மாற்றம் கண்டது. இவை அனைத்தும் சமய இயக்கங்கள் தமிழைப் பயிற்றுவிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளாகும். ஆங்கிலேய அரசு மிகக் குறைந்த பள்ளிகளையே தோற்றுவித்தது. ஆங்கிலேய அரசின் முதல் முயற்சியாக,1897ஆம் ஆண்டில் சிரம்பானில் ஒரு தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது. பிறகு, 1900ஆம் ஆண்டு பேராக்கின் பாகான் செராயில் அரசினர் தமிழ்ப்பள்ளி நிறுவப்பட்டது. அதே ஆண்டில் மலாக்காவிலும் நெகிரி செம்பிலானிலும் சில தமிழ்ப்பள்ளிகள் நிறுவப்பட்டன.

தொழிலாளர் சட்டமும் தமிழ்ப்பள்ளிகளும்

ஆங்கிலேயர்கள் பல்வகைத் தாய்மொழிக் கல்வியை விரும்பவில்லை. இது மொழிச்சிக்கலையும் பல்லினங்களுக்கிடையே ஒற்றுமையின்மையையும் உருவாக்கும் என்பது அவர்களின் கருத்து. மேலும், அவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் குடியேற்றக்காரர்களின் பிள்ளைகளுக்கெனத் தனிப்பள்ளிகள் தேவையில்லை எனவும் கருதினர். இச்சுழலில் தமிழ்ப்பள்ளிகளின் கட்டாய வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கியது 1912ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் அமல்படுத்தப்பட்ட (Labour Ordinance) எனும் தொழிலாளர் சட்டமாகும். இச்சட்டம் ஒரு தோட்டத்தில் ஏழு முதல் பதினான்கு வயதிற்குட்பட்ட பத்துப் பிள்ளைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகம் அவசியம் பள்ளி ஒன்றனை நிறுவ வேண்டும் என வலியுறுத்தியது. இதனால் ஒரே நிர்வாகத்தின்கீழ் இயங்கும் தோட்டப் பிரிவுகளிலும் (Division) தனித்தனி பள்ளிகள் அமைக்கப்பட்டன. இதன் விளைவாக 1920ஆம் ஆண்டில் 122 தமிழ்ப்பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டன. புதிதாக தோற்றுவிக்கப்பட்ட இப்பள்ளிகளில் ஆசிரியர்களைப் பணியில் அமர்த்துவதும் தோட்ட முதலாளிகளின் கடமையாக இருந்தது.

1925ஆம் ஆண்டு ஒருங்கிணக்கப்பட்ட மலாய் மாநிலங்களில் 8153 மாணவர்களுடன் மொத்தம் 235 தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டன. 1930இல் இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் 12640 மாணவர்களுடன் 333ஆக அதிகரித்தன. இருப்பினும், தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தோட்ட முதலாளிகள் அதிகம் முனைப்பு காட்டவில்லை. 1937ஆம் ஆண்டு வரை 13 அரசினர் பள்ளிகள் மட்டும் நகர்ப்புறங்களில் நிர்வகிக்கப்பட்டன. நகரங்களில் தனிநபர்களாலும் சமய அமைப்புகளாலும் சில தமிழ்ப்பள்ளிகள் நிறுவப்பட்டன. பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகள் வசதியற்று கோவில்களிலும் பொது மண்டபங்களிலும் தற்காலிகக் கட்டடங்களிலும் அமைந்திருந்தன. அவற்றில் தோட்ட குமாஸ்தாக்களும் கங்காணிகளும் மருத்துவ உதவியாளர்களும் கோவில் பூசாரிகளும் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். ஒரு சில நகரப் பள்ளிகளில் மட்டுமே இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருந்தனர். நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே கற்றல் கற்பித்தல் நடைபெற்றன. தமிழ்நாட்டிலுள்ள உறவினருக்குக் கடிதம் எழுதத் தேவையான தமிழறிவும் கணிதமும் முக்கியப் பாடங்களாகக் கற்பிக்கப்பட்டன. இப்பள்ளிகளில் பல்வேறு கலைத்திட்டங்களின் அடிப்படையிலான போதனை முறையும் யாழ்பாணத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும் தருவிக்கப்பட்ட பாடநூல்களும் பயன்படுத்தப்பட்டன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்

ஜப்பானியர் ஆட்சியின்கீழ் தமிழ்ப்பள்ளிகளில் ஜப்பானிய மொழியும் ஜப்பானிய நாட்டுப்பற்றை வளர்க்கும் கல்விமுறையுமே மேலோங்கி இருந்தன. இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஆங்கிலேய அரசு தாய்மொழிக் கல்வியின்பால் சற்று கவனம் செலுத்தியது. இருப்பினும், ஆங்கில மொழிவழிக் கல்விக்கே முதலிடம் வழங்கப்பட்டது. இக்காலக்கட்டத்தில், மலாய்க்காரர்கள் மலாய்ப்பள்ளிகளின் கல்வி முறையில் மாற்றங்களைக் கொண்டு வருமாறு ஆங்கிலேய அரசை வற்புறுத்தினர். அதன் விளைவாக, (L.J.Barnes) அவர்கள் தலைமையில் ஆய்வுக்குழு நிறுவப்பட்டு ஆய்வறிக்கையும் (Report of the Committee on Malay Education, Federation of Malaya) 1951ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இதில் தமிழ் மற்றும் சீனக்கல்வி வளர்ச்சிக்கான பரிந்துரைகள் ஏதுமில்லை. மாறாக, அவை படிப்படியாகத் மலாய்ப்பள்ளிகளாக மாற்றம் பெற வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டது. பார்ன்ஸ் அறிக்கையால் சீனர்களும் இந்தியர்களும் அதிருப்தி அடைந்தனர்.

பல்வேறு கல்வி அறிக்கைகள்

சீனக் கல்வியைப் பற்றிய கருத்துகளை அறிய 1951ஆம் ஆண்டில் ஃபென்-வூ (Fenn-Wu) ஆய்வுக்குழு நியமிக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை (Fenn-Wu Report)சீனப்பள்ளிகள் இந்நாட்டில் நீடுத்திருப்பதை அதிகமாக வலியுறித்தியது. தமிழ்க்கல்வி குறித்து ஆய்வு செய்ய சிறப்புக் குழு நியமிக்கப்படவில்லை என்பதால், இந்தியர்கள் தங்களுக்கென உருவாக்கிய கல்விக்குழு இந்நாட்டில் தமிழ்ப்பள்ளியும் தமிழ்மொழியும் நீடித்திருக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியது. அதன் பின்னர் 1952ஆம் ஆண்டில் அமலாக்கத்திற்கு வந்த கல்விச் சட்டத்தில் (Ordinan Pelajaran 1952) தமிழ்ப்பள்ளிகளும் படிப்படியாக மலாய்மொழியைப் பயிற்றுமொழியாகக் கொண்ட தேசியப்பள்ளிகளாக மாற்றம் பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இன ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு இச்சட்டம் அமலாக்கப்படவில்லை.
1955இல் கூட்டணிக்கட்சி (Parti Perikatan) முதல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது. அப்போதைய கல்வி அமைச்சரான டத்தோ ஹஜி அப்துல் ரசாக் பின் டத்தோ ஹூசேன் அவர்களின் தலைமையில் கல்விக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. தொடக்கப்பள்ளிகளில் மலாய், ஆங்கிலம், சீனம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளையும் பயிற்றுமொழிகளாக ஏற்றுக் கொள்வது என ரசாக் கல்வி அறிக்கையில் (Laporan Razak) பரிந்துரைக்கப்பட்டது. இதன் வாயிலாக, மலாய், ஆங்கிலம், சீனம், தமிழ் ஆகிய பயிற்றுமொழிகளைக் கொண்ட பள்ளிகள் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. எல்லா வகைப் பள்ளிகளுக்கும் பொதுவான ஒரே கலைத்திட்டமும் மலாயா பின்னணியைக் கொண்ட பாடநூல்களின் தயாரிப்பும் பயன்பாடும் வலியுறுத்தப்பட்டது. தொடக்கப்பள்ளி ஆசிரியர் பயிற்சிக்கான கல்வித் தகுதி உயர்த்தப்பட்டது. நாட்டின் பல முக்கிய நகரங்களில் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்கான நாள் பயிற்சி மையங்கள் (Day Training Centre) தோற்றுவிக்கப்பட்டன.

இவ்வறிக்கையில் அடங்கியிருந்த பதினேழு பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டே 1957ஆம் ஆண்டு கல்விச் சட்டம் (Ordinan Pelajaran 1957) உருவானது. அதே ஆண்டில் இக்கல்விச் சட்டம் நடைமுறைக்கு வந்து தேசியக் கல்விக் கொள்கையும் (Dasar Pelajaran Kebangsaan) உருவானது. அப்போது நாட்டில் மொத்தம் 888 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. இதன் பின்னர், ரசாக் அறிக்கையின் அமலாக்கத்தை ஆய்வு செய்த, ரஹ்மான் தாலிப் அறிக்கை, 1961ஆம் ஆண்டு கல்விச்சட்டமாக (Akta Pelajaran 1961) அங்கீகரிக்கப்பட்டது. இவ்வறிக்கையானது எல்லா வகை தொடக்கப்பள்ளிகளிலும் இலவசக் கல்விக்கு வித்திட்டது. தமிழ் மற்றும் சீனப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும் எனவும் இதில் பரிந்துரைக்கப்பட்டது. பிறமொழிப் பள்ளிகளில் பயிலும் சீன, இந்திய மாணவர்கள் எண்ணிக்கையில் பதினைந்து பேர் இருப்பின், அவர்களது பெற்றோரின் விருப்பத்தின் பேரில், அவர்களுக்குத் தாய் மொழிக்கல்வியும் (Pupils Own Language) வழங்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது. தமிழ், சீனம் ஆகிய மொழிகளைப் பயிற்றுமொழிகளாகக் கொண்ட பள்ளிகளைத் தேசிய வகைத் தொடக்கப்பள்ளிகள் (Sekolah Rendah Jenis Kebangsaan) என்றும் வகைப்படுத்தப்பட்டன.

தொடக்கப்பள்ளிக்கான புதிய கலைத்திட்டம் (KBSR)

1979இல் தேசியக் கல்வி அமலாக்க முறை மறுஆய்வு செய்யப்பட்டது.இந்த ஆய்வில் தொடக்கப்பள்ளிக்கான அப்போதைய கலைத்திட்டம் மாணவர்களுக்கு மிகுந்த சுமையாக உள்ளதெனக் கண்டறியப்பட்டது. அடிப்படைத் திறன்றகளான எண், எழுத்து, வாசிப்பு ஆகிய திறன்கள் கல்விமுறையில் வலியுறுத்தப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டது. இதன் விளைவாக 1982ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளிகளுக்கான புதிய கலைத்திட்டம் (Kurikulum Baru Sekolah Rendah) உருவாக்கப்பட்டது. இதுவே மலேசியாவில் முறைப்படுத்தப்பட்ட தமிழ்க்கல்வி உருவான காலக்கட்டம் எனக் கூறலாம். இக்கலைத்திட்ட அமலாக்கத்தில் தமிழ்மொழிக்கும் தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு கற்பிக்கப்படும் மற்றப் பாடங்களுக்கும் தமிழில் பாடத்திட்டமும் பாடத்திட்ட விளக்கவுரையும் தயாரித்து வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1994ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளிகளுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட கலைத்திட்டம் (Kurikulum Bersepadu Sekolah Rendah) அமல்படுத்தப்பட்டது. பழைய கலைத்திட்டத்தில் காணப்பட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன. இக்கலைத்திட்டம் மீண்டும் மறுஆய்வு செய்யப்பட்டு 2011ஆம் ஆண்டு தர அடிப்படையிலான கலைத்திட்டம் தொடக்கப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கலைத்திட்டமும் தமிழ்க்கல்வியின் மேம்பாட்டிற்குத் பெருந்துணையாக அமைந்தது.

பள்ளிகளின் உருமாற்றம்

நமது நாட்டின் கல்விமுறை அமலாக்கதில் திறப்பாட்டுப் பள்ளிகள்(Smart Schools), தொலைநோக்குப் பள்ளிகள் (Sekolah Wawasan) போன்ற திட்டங்களையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு, கல்வி அமைச்சின் முறையான கலைத்திட்டத்தைக் கொண்ட தமிழ்ப்பாலர் பள்ளிகள் அரசின் முழுஉதவி பெறும் தமிழ்ப்பள்ளிகளில் தொடங்கப்பட்டுச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இவ்வகுப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதுமட்டுமல்லாது, இதற்கு முன்னர் தேசியப்பள்ளிகளில் மாணவர்களின் தாய்மொழிக் கல்வியாக {Pupils’ Own Language (POL)} கற்பிக்கப்பட்ட தமிழ்மொழி 2000ஆம் ஆண்டு தொடங்கி கூடுதல் மொழியாக (Bahasa Tambahan) கற்பிக்கப்பட்டும் வருகிறது.இதனை இந்திய மாணவர்களோடு பிற இன மாணவர்களும் பெர்லீஸ் தொடங்கி சபா வரையிலும் விருப்பப் பாடமாக பயின்று வருகின்றனர்.

இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்க்கல்வி

இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்க்கல்வியும் தமிழ்ப்பள்ளிகளைப் போன்றே நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டு வருகின்றது. புதுமுக வகுப்பு தொடங்கி படிவம் ஐந்து வரையிலும் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது. 1989ஆம் ஆண்டு இடைநிலைப்பள்ளிகளுக்கான புதிய கலைத்திட்டம் (Kurikulum Baru Sekolah Menengah) அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் இடைநிலைப்பள்ளிகளுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட கலைத்திட்டமும் (Kurikulum Bersepadu Sekolah Menengah) அமல்படுத்தப்பட்டது. 2017ஆம் ஆண்டு தொடங்கி இடைநிலைப்பள்ளிகளுக்கான தர அடிப்படையிலான கலைத்திட்டமும் முதலாம் படிவத்தில் அமல்படுத்தப்படவும் உள்ளது. தற்போது தமிழ்மொழி மாணவர்களின் தாய்மொழிக் கல்வி (POL) முறையிலும் முழுநேரமாகவும் வகுப்பில் போதிக்கப்பட்டு வருகின்றது. மூன்றாம் படிவத்தில் பிடி3 (PT3) தேர்விலும் ஐந்தாம் படிவத்தில் எஸ்.பி.எம் (SPM) தேர்விலும் அங்கீகரிக்கப்பட்ட பாடமாகவும் தமிழ் விளங்குகின்றது. ஐந்தாம் படிவ மாணவர்கள் தமிழைத் தவிர்த்து தமிழ் இலக்கியத்தையும் தேர்வுப் பாடமாக பயிலும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர் என்பதுவும் மற்றொரு மகிழ்வூட்டும் தகவலாகும். ஆறாம் படிவ உயர்நிலைக்கல்வியிலும் தமிழ்மொழி முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆறாம் படிவத்தில் தமிழைத் தேர்வுப் பாடமாக எடுத்துச் சிறந்த தேர்ச்சியினைப் பெறும் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் தகுதியையும் பெறுகின்றனர். இப்பாடத்திற்கான கலைத்திட்டத்தை மலேசியத் தேர்வுப் பேரவை (Majlis Peperiksaan Malaysia) நிர்ணயம் செய்கிறது. தமிழ்மொழியில் சிறந்த புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழை முதன்மைப் பாடமாக பயிலும் வாய்ப்பும் வழங்கப்படுகின்றது.

தமிழ் ஆசிரியர்களுக்கான பயிற்சி

தமிழாசிரியர்களைப் பயிற்றுவிக்கும் நோக்கில் 1960இல் தலைநகரில் நாள் பயிற்சிக் கல்லூரியில் (Day Training College) முழுநேர தமிழாசிரியர் பயிற்சி தொடக்கப்பட்டது. 1967இல் தஞ்சோங் மாலிமில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தற்காலிகத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கென மூன்று வருட விடுமுறைக்காலப் பயிற்சியும் (SRT) தொடக்கப்பட்டது. ஜாலான் குவாந்தான் நாள் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீகோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி எனப் பெயர் மாற்றம் கண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கான பயிற்சி ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ராஜாமூடா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் மற்றுமொரு தமிழாசிரியர் பயிற்சிப் பிரிவும் தொடக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பிரிவு லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. இக்கல்லூரியும் பின்னர் 1989ஆம் ஆண்டில் மூடப்பட்டது. இதில் பயிற்சி பெற்று வந்த ஆசிரியர்களுள் ஒரு பகுதியினர் சுங்கை பட்டாணியில் புதிதாகத் திறக்கப்பட்ட சுல்தான் அப்துல் ஹலிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் தமிழ்ப் பிரிவிற்கு மாற்றப்பட்டனர். எஞ்சியவர்கள் கோலாலம்பூரில் இயங்கிய ஸ்ரீகோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு மாற்றப்பட்டனர். இதே கால கட்டத்தில் இராஜா மெலெவார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கிந்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, தெருந்தொம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, முகமது காலிட் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, துவான்கு பைனும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ்ப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு 1999ஆம் ஆண்டு வரையில் எட்டு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்பட்டது.

மலேசியாவில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சி பெறுவதற்கென மனு செய்வோர் மற்ற நாடுகளில் உள்ளதைப் போல் தாங்கள் பயிற்சி பெறுவதற்கெனக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அரசாங்கத்தால் நடத்தப்படும் எல்லா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கென இலவசப் பயிற்சி வழங்கப்படுவதோடு அவர்களுக்கெனப் படித்தொகையும் (allowance) வழங்கப்படுகிறது. பயிற்சியின் இறுதியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்கமே வேலை வாய்ப்பினையும் வழங்குகிறது. இந்தியர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழிக் கல்விக்கு இத்தகைய வாய்ப்பையும் வசதியையும் எந்தவொரு அரசாங்கமும் ஏற்படுத்தி தரவில்லை என்ற ஓர் உண்மையை நாம் உணர வேண்டும்.

பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கல்வி

நாட்டின் முதல் பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக்கழகத்தில் 1956 முதல், கலை சமூகவியல் புலத்தில் இந்திய ஆய்வியல் துறையின்கீழ் தமிழ் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்திய ஆய்வியல் துறையில் தற்காலத் தமிழ் இலக்கியம், சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம், இலக்கணம் ஆகியவை கற்பிக்கப்படுகிறது. மேலும், மலாய்மொழியில் தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம், ஆகியவற்றைப் பற்றியும் கற்பிக்கப்பட்டு வருகின்றது. மலாயாப் பல்கலைக்கழகத்தின் மொழி, மொழியில் புலத்தில் தமிழ்மொழியியலில் இளங்கலைப் பட்டப்படிப்பு 1998ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்துறையில் தமிழ் மொழித்திறன், ஒலியியலும் ஒலியணியலும், உருபணியல், தொடரியல், மொழியும் இலக்கியமும், மொழியும் பண்பாடும், தமிழ் வட்டார வழக்கு, பனுவலாய்வியல், இருவழி மொழியாக்கம் முதலிய பாடங்கள் தமிழில் கற்பிக்கப்படுகின்றன.

மலேசியாவிலுள்ள சபா மலேசிய பல்கலைக்கழகம், பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ஆகிய அரசுப் பல்கலைக்கழகங்களில் இரண்டாம் மொழியாக எளிய தமிழ் கற்பிக்கப்படுகிறது. 1996ஆம் ஆண்டு முதல் புத்ரா பல்கலைக்கழகத்தில் வேற்றுமொழித் துறையில் (Jabatan Bahasa Asing) தமிழ் ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்ப்பள்ளிகளின் தற்கால வளர்ச்சி

தமிழ்ப்பள்ளிகளே இந்நாட்டில் தமிழ்க்கல்விக்கு அடித்தளங்களாக விளங்குகின்றன. தமிழ்ப்பள்ளிகளை அடிப்படையாகக் கொண்டே இடைநிலை, உயர்நிலை, பல்கலைக்கழகம் ஆகிய எல்லா நிலைகளிலும் தமிழ்க்கல்வி பரிணமிக்கிறது. தமிழ்கல்விக்கு இந்நாட்டில் நல்ல எதிர்காலம் உள்ளது.

இந்நாட்டுத் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு ம.இ.காவின் (Malayan Indian Congress) பங்கு அளப்பரியது என்றே கூற வேண்டும். இந்தியர்களைப் பிரநிதிக்கும் ம.இ.கா தமிழ்ப்பள்ளிகளின்பால் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. மேலும், தமிழ்மொழி சார்ந்த இயக்கங்களும் பொது அமைப்புகளும் தனிநபர்களும் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருவதும் இத்தருணத்தில் நினைவுகூரப்பட வேண்டும்.தமிழ்ப்பள்ளிகள் தலைமைத்துவம், நிருவாகம், கட்டட வசதி, மாணவர் நலன், கற்றல் கற்பித்தல் ஆகியவற்றில் மேம்பாடு காண பல இயக்கங்கள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

வாழ்க தமிழ்; வளர்க தமிழ்க்கல்வி.